உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி நவ.,15ம் தேதி முதல் வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்

ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி நவ.,15ம் தேதி முதல் வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்

புதுச்சேரி: வரும் நவ.,15ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில், தீபாவளி பண்டிகையொட்டி, ரேஷன் கார்டுகளுக்கு இலவசமாக 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கும் பணி துவக்க விழா மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்தது.அரசு செயலர் முத்தம்மா வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கும் பணியை துவக்கி வைத்தனர்.முன்னதாக சண்முகாபுரத்தில் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர்.விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:எனது அரசு, சொன்னதை செய்கின்ற அரசு. அதை செம்மையாக செய்து முடிக்கும். பிரதமரின் உதவியோடு, அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. முதியோர் உதவித் தொகை உயர்த்தி உள்ளோம்.பிரதமரின் வீடு கட்டும் திட்ட நிதி ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாய கடன் 13.41 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.சுற்றுலாத்துறை மேம்படுத்த ரூ.4,250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவமனையில், அனைத்து வசதிகளுடன் கூடிய 13 அறுவை சிகிச்சை கூடம் கட்டப்பட்டு வருகிறது. கரிக்கலாம்பாக்கத்தில் அரசு மருத்துவமனை கட்டப்படும். ஏ.எப்.டி., சுதேசி மில் இடத்தில், ரூ.105 கோடி மதிப்பில் ஐ.டி. பார்க் போன்ற தொழில் வணிகங்கள் தொடங்க ஆலோசித்து வருகிறோம்.கடந்த லோக்சபா தேர்தலின்போது, பொதுமக்கள் ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்குகிறோம். அடுத்த மாதம் 14 மற்றும் 15ம் தேதி அன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் திறந்து, சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ அரசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், சிவசங்கர், தலைமை செயலர் சவுகான், அரசு செயலர் நெடுஞ்செழியன், குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ