வட்டம்-1 அளவிலான குழந்தைகள் தின போட்டி
புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை சார்பில் 2025--26ம் ஆண்டிற்கான வட்டம்-1 அளவிலான குழந்தைகள் தின போட்டிகள் தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது. துணை ஆய்வாளர் அனிதா தலைமை தாங்கினார். துணை இயக்குநர் ராமச்சந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் தமயந்தி ஜாக்லின், ராமதாஸ், இளங்கோவன், சரஸ்வதி, முனியம்மாள், கனிமொழி, கமலாதேவி ஆகியோர் செய்திருந்தனர். இதில், வட்டம்-1 அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த முன் மழலையர் முதல் பிளஸ் 2 வரையிலான 750 மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடம், ஓவியம், குழு பாடல், குழு நடனம், வினாடி வினா, நாடகம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. அனைத்து போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து, தலைமை ஆசிரியர்கள், நடுவர்கள், கமிட்டி உறுப்பினர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.