திருக்குறளை தெரிந்து கொள்ள வேண்டும் வழக்கறிஞர்களுக்கு முதல்வர் அறிவுரை
புதுச்சேரி : இந்திய அரசியலமைப்பு சாசன ஏற்பின் 75 வது ஆண்டு விழா மற்றும் சட்ட நாள் விழா முதலியார்பேட்டை ஓட்டல் சன்வே மேனரில் நேற்று நடந்தது.விழாவை, உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;நமது சட்டக்கல்லுாரியில் படித்த மாணவர்கள் சிறந்த வழக்கறிஞர்களாக இருக்கின்றனர். சட்டக்கல்லுாரி முதல்வர்களும், பேராசிரியர்களும் சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்கி வருகின்றனர்.இது மிகவும் பெருமைக்குரியது. இளம் வழக்கறிஞர்கள் தினமும் திருக்குறளை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.புதுச்சேரி மக்கள் எதிர்பார்ப்பது விரைவாக நீதி கிடைக்க வேண்டும். அந்த வகையில் நீதிமன்றங்கள் வழக்கினை விரைவாக முடித்து தரவேண்டும். புதுச்சேரி அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக உள்ளது. நீதிமன்றத்தில் தேவையான அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி வருகிறது என்றார்.