உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலங்கை கடற்படை கைது செய்த மீனவர் குடும்பங்களுக்கு கலெக்டர் ஆறுதல்

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர் குடும்பங்களுக்கு கலெக்டர் ஆறுதல்

காரைக்கால்: காரைக்காலில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கலெக்டர் மணிகண்டன் ஆறுதல் கூறினார்.காரைக்கால், கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேல். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதி மற்றும் தமிழகத்தை சேர்ந்த, 13 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் கடலில் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் செந்தமிழ் என்ற மீனவரின் காலில் குண்டடிப்பட்டது. அவருக்கு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது குடும்பத்தினரை கலெக்டர் மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து படகின் உரிமையாளர் ஆனந்தவேல் வீட்டிற்கு சென்றார். அவரது குடும்பத்தினரை சந்தித்து நம்பிக்கை அளித்தார். இந்த சந்திப்பின் போது மீனவ குடும்பங்கள், கண்ணீர் மல்க மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது மீனவ பஞ்சாயத்தினர், மீனவர் நலத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். கலெக்டர் மணிகண்டன் கூறியதாவது: செந்தமிழுக்கு இலங்கை மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்திய தூதரக அதிகாரிகள் அவரை கண்காணித்து வருகின்றனர். அவருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கவும், மற்ற மீனவர்களை அழைத்து வரவும் தூதரங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு மத்திய, மாநில அரசுகள் துணையாக இருக்கும். அரசுக்கு மீனவர்கள் ஒத்துழைப்பு அளிப்பதோடு, போராட்டங்கள் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ