20 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பால் காங்., - கூட்டணி கட்சிகள் ஷாக்
புதுச்சேரி : வரும் சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிடும்; கூட்டணி கட்சிகளுக்கு 10 தொகுதிகள் மட்டுமே தருவோம் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவித்துள்ளதால் காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஷாக்காகியுள்ளனர்.உருளையன்பேட்டை தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் தொகுதி பொறுப்பாளர் கோபால் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா சட்டசபை தேர்தலில் தி.மு.க., போட்டியிடும் இடங்கள் குறித்து காங்., கூட்டணி கட்சிகளுக்கு ஷாக் அளிக்கும் வகையில் அதிரடியாக அறிவித்தார்அவர், பேசியதாவது:இந்த ஆட்சியில் அரிசி மட்டும் அல்ல பத்திரப்பதிவிலும் மோசடி நடக்கிறது. ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் மனைகளின் விலை உயர வேண்டும் என்பதற்காக நில வழிகாட்டி மதிப்பை உயர்த்துகின்றனர். வில்லியனுாரில் இருந்து 2 கி.மீ.,க்கு அப்பால் உள்ள சேந்தநத்தம் கிராமத்தில் ஒரு சதுர அடி ரூ. 300 முதல் ரூ.400 வரை தான் போகும். ஆனால் அங்கு நில வழிகாட்டி மதிப்பை ரூ.1,600 என, நிர்ணயிக்கின்றனர்.இனி முன்பு போல் போராட்டம் மட்டும் நடத்தப்படாது. அரசின் தவறுகளை எதிர்த்து நீதிமன்றமும் செல்வோம். உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருந்தால் 5 நகராட்சிகளையும் தி.மு.க., கைப்பற்றி இருக்கும். ஆனால் நியமன எம்.எல்.ஏ., உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருந்தாலும் ஆட்சியாளர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வரவில்லை.ஆட்சியாளர்களுக்கும், கவர்னருக்கும் முரண்பாடு உள்ளது. எந்த கோப்பிற்கும் கவர்னர் அனுமதி தருவதில்லை. ஒருவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்பார். பஸ் நிலையம் கட்டுவது, அண்ணா திடல் கட்டுவது ஆகிய திட்டங்களில் ஊழல் என்பார். அதன் பின், காணாமல் போய்விடுவார்.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என, 16 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு எந்த கோப்பும் கவர்னர் மூலமாகத்தான் செல்லும். ஆனால் சட்டசபையில் நிறைவேற்றிய மாநில அந்தஸ்து தீர்மானங்களை கவர்னர் அனுப்பாமலேயே வைத்து கொண்டார். இதனை அறிந்து தி.மு.க., போராட்டம் நடத்தியது. அதன் பின்பே, தீர்மானம் மத்திய அரசுக்கு சென்றது.முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கேட்பார். ஆனால் தட்டாஞ்சாவடியை தாண்டி எங்கும் செல்ல மாட்டார். பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சென்று சந்திக்க மாட்டார். டில்லி சென்று கதவை தட்டினால்தானே கிடைக்கும்.புதுச்சேரியில் முன்பு 4, 5 இடத்தில் மட்டும் பெண்கள் டான்ஸ் நடைபெற்றது. இந்த ஆட்சியில் 423 ரெஸ்டோ பார்கள் அனுமதி கொடுக்கப்பட்டு அங்கெல்லாம் மெல்லிசை நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரே ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை.பா.ஜ., வில் 100 பேர் சேர்ந்து கார்ப்பரேட் அலுவலகம் அமைத்து கட்சியை நடத்துகின்றனர். தி.மு.க., மக்களோடு மக்களாக இணைந்து செயல்படுகிறது. சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளை கேட்டுப் பெற முடிவு செய்துள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு 10 தொகுதிகளை தருவோம். கட்சி வளர்ச்சிக்காக இந்த தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கூட்டணி கட்சியினர் பேசுவர். அது அவர்களது உரிமை. அதற்காக அவர்களிடம் சங்கடப்பட்டு நிற்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி., சிவக்குமார்,. எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.