காங்., பொய் பிரசாரம் செய்கிறது அ.தி.மு.க., செயலாளர் காட்டம்
புதுச்சேரி: 'காங்., பொய் பிரசாரம் செய்கிறது' என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார். அவர், கூறியதாவது: புதுச்சேரியில் பள்ளி வாசலுக்கு சொந்தமான இடங்களை பண பலம் படைத்தவர்கள், சில அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த இடங்களில் அரசு சார்பில், இலவச அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டால் அதன் மூலம் ஏராளமான இஸ்லாமியர்கள் பயன்பெறுவர். அதற்கான விண்ணப்பங்கள் இஸ்லாமிய மக்களிடம் இருந்து பெறப்பட்டு முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை பொறுக்க முடியாத தி.மு.க.,வினரின் துாண்டுதலால் புகார் தெரிவித்ததன் பேரில், கலெக்டர் வக்பு வாரிய உறுப்பினரை அழைத்து எச்சரித்தார். கடந்த கால தி.மு.க., காங்., ஆட்சியிலும், தற்போது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் வக்பு போர்டு இதுவரை அமைக்கப்படவில்லை. இதனை அ.தி.மு.க., கண்டிக்கிறது. சுல்தான்பேட்டை பள்ளி வாசல் இடத்தை ஆக்கிரமித்து தி.மு.க., கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பள்ளி வாசல் இடத்தில் இருந்து தி.மு.க., கட்சி அலுவலகத்தை விடுவிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நாட்களாக மத கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடக்கூடிய செயலில் தி.மு.க., எம். எல்.ஏ அனிபால் கென்னடி மற்றும் காரை க்கால் எம்.எல்.ஏ., நாஜிம் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இவர்களின் செயல் பாடுகளை கண்காணிக்க வேண்டும். தி.மு.க.,வால் இந்த அரசை குறை கூற முடியாத நிலையில், காங்., பொய் பிரசாரம் செய்கிறது. நாராயணசாமி இதுவரை 50க்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை பொய்யாக பேசியுள்ளார். கடந்த காலத்தில் ஆட்சியை வீணடித்த முன்னாள் முதல்வர்கள் நாராயணசாமி மற்றும் வைத்திலிங்கம் வெறுப்பு அரசியலை வெளிப் படுத்துகின்றனர்' என்றார்.