புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து துணை ஜனாதிபதியிடம் காங்., கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தர வேண்டும் என, துணை ஜனாதிபதியிடம் காங்., கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.புதுச்சேரிக்கு மூன்று நாள் அரசு பயணமாக வந்துள்ள துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை, புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., சட்டசபை தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.இச்சந்திப்பு குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அவசியம். பல முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் மாநில அந்தஸ்து தரப்படவில்லை. இது குறித்து துணை ஜனாதிபதியுடன் எடுத்துரைத்தோம். புதுச்சேரி மாநில அந்தஸ்து தருவது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தராக துணை ஜனாதிபதி தான் உள்ளார். பல்கலைக்கழக அனைத்து படிப்புகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு தரப்படவில்லை. இது தொடர்பாகவும் அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்று வலியுறுத்தினோம். இந்த இரண்டு கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்' என்றார்.