ஓட்டுப்பதிவு தாமதத்தால் சர்ச்சை
புதுச்சேரி: ஓட்டுச் சாவடியில் மாலை 6:00 மணிக்கு மேலும் ஓட்டுப்பதிவு நீடித்ததால் சர்ச்சை நிலவியது. தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை இடைவெளி இன்றி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, புதுச்சேரியில் பெரும்பான்மையான ஓட்டுச் சாவடிகளில் மாலை 6 மணிக்கு முன்பே ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. ஆனால், தொகுதியை சேர்ந்த 5ம் ஓட்டுச் சாவடியான முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச் சாவடியில் மட்டும் மாலை 6:30 மணிக்கு மேலும் ஓட்டுப்பதிவு நீடித்தது அரசியல் கட்சியினரிடையே பெருத்த சந்தேகம் ஏற்படுத்தியது. விசாரணையில், இந்த ஓட்டுச் சாவடியில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு 'பீப்' சவுண்ட் தாமதமாக வந்தது. இதனால், ஓட்டுப்பதிவு தாமதமானது. அதன் பிறகு 'பேட்டரி' மாற்றப்பட்டது. இதனாலும், நேரமானது. இந்நிலையில், மாலை 3 மணிக்கு பிறகு ஓட்டு போட 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் திரண்டனர். இதனால், இந்த ஓட்டுச் சாவடியில் இரவு 7:15 மணிவரை ஓட்டுப்பதிவு நீடித்தது தெரிய வந்தது.