இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: வில்லியனுார் அருகே சோகம்
வில்லியனுார்: வில்லியனுார் அருகே தற்கொலைக்கு முயன்ற முதிய தம்பதி, அடுத்தடுத்து இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த பத்துக்கண்ணு சதுக்கத்தில் நேற்று முன்தினம் மதியம் ஊசுடேரி மதகு கட்டையில் வயதான தம்பதியர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் திடீரென மதகில் இருந்து வாய்க்காலில் குதித்தனர். இதனை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள், நீரில் மூழ்கிய தம்பதியை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வில்லியனுார் போலீசார் தற்கொலைக்கு முயன்ற தம்பதியிடம் விசாரணை நடத்தினர். அவர்கள், கும்பகோணம் பகுதியை சேர்ந்த மாரிதுரை, 83; அவரது மனைவி முத்துலட்சுமி, 74, என்பதும், அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகள் தஞ்சாவூரிலும், மகன் ஆனந்த், குடும்பத்துடன் புதுச்சேரி கூடப்பாக்கம் ஆனந்தா நகரிலும் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கூடப்பாக்கம் மகன் வீட்டிற்கு வந்து தங்கினர். தம்பதிக்கு வயது மூப்பு காரணமாக திடீர் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தம்பதியர் மனமுடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆனந்த், ஊசுடேரி லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பெற்றோரை அழைத்துச் சென்றார். மருத்துவ பரிசோதனைக்கு பின், இருவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு, அங்கிருந்து ஆனந்த் வேலைக்கு சென்றார். மருத்துவமனையில் இருந்து இருவரும் வீட்டிற்கு செல்லாமல், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, நடந்தே பத்துக்கண்ணு பகுதிக்கு சென்றனர். மதகு கட்டையில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த இருவரும், திடீரென தண்ணீரில் குதித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கதிர்க்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஆனந்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மாரிதுரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முத்துலட்சுமி நலமாக இருந்ததால் வீட்டிற்கு அனுப்பினர். மாரிதுரை நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார். அதே நேரத்தில் வீட்டில் இருந்த முத்துலட்சுமிக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முதிய தம்பதி இறப்பிலும் இணைபிரியாதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.