வாகன வசதி இன்றி தவிக்கும் சைபர் கிரைம் போலீசார்
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை விட சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 2022ம் ஆண்டு நவ., மாதம், சைபர் கிரைம் போலீஸ் நிலையம் தனியாக உருவாக்கப்பட்டது. சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையின் கீழ் கோரிமேட்டில் இயங்கி வருகிறது. சைபர் கிரைம் மோசடிகள் குறித்து போலீசாரின் விழிப்புணர்வு வீடியோக்கள், செய்திகள் காரணமாக மோசடி நபர்களிடம் ஏமாறும் பொதுமக்கள் உடனுக்குடன் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் வந்து புகார் அளிக்க துவங்கி உள்ளனர். இதனால் சைபர் கிரைம் மோசடி புகார்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.சைபர் கிரைம் மோசடியில் பெரும்பாலும் உள்ளூர் நபர்கள் ஈடுபடுவது கிடையாது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலத்தினர் ஈடுபடுகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய வெளியூர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த சூழ்நிலையில் சைபர் கிரைம் போலீசாருக்கு சரியான வாகன வசதி இல்லை.தற்போதுள்ள பொலிரோ ஜீப் உள்ளூரில் மட்டுமே பயன்படுத்த முடியும். வெளியூர் சென்று குற்றவாளிகளை கைது செய்து வர சரியான வாகன வசதி இல்லாததால் சைபர் கிரைம் போலீசார் கடும் சிரமத்திற்கு இடையே பணியாற்றி வருகின்றனர்.