உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்க... முடிவு; ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை

கோவில்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்க... முடிவு; ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை

புதுச்சேரி: கோவில்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தஹிந்து அறநிலையத் துறை முடிவு செய்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 243 கோவில்கள் உள்ளன. கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் பூமாலைகள், மலர்கள், பழங்களை காணிக்கையாக செலுத்தி இறைவனை தரிசிக்கின்றனர். இறைவனுக்கு செலுத்தப்படும் இந்த காணிக்கைகள், மறுநாள் குப்பையோடு குப்பையாக சேர்ந்து அழுகி துர்நாற்றம் வீசுகிறது. அப்படியே இக்குப்பைகள் லாரிகளில் கொண்டு சென்று குருமாம்பேட் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது. இது பக்தர்களுக்கு மனவேதனையை தந்தது. இனி, இதுபோன்று நடக்காமல் இருக்க, புதுச்சேரி கோவில்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஹிந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தப்படும் பூமாலைகளில் இருந்து மதிப்பு கூட்டப் பொருட்கள் தயாரித்து மீண்டும் கோவிலுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள், பீட்பேக் பவுண்டேஷன் தன்னார்வ அமைப்புடன் ஹிந்து சமய அறநிலையத் துறை கைகோர்த்துள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரிகளையும் நேரில் அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றது. இத்திட்டம் குறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையரும், ஹிந்து சமய அறநிலைய துறை பொறுப்பு ஆணையருமான கந்தசாமி கூறியதாவது: மாநிலத்தில் மொத்தம் 243 கோவில்களில் சுவாமியை தரிசக்க வரும் பக்தர்கள், தினசரி டன் கணக்கில் பூமாலைகள், பூக்கள், ஆடைகளை காணிக்கையாக சமர்பிக்கப்படுகின்றன. இந்த காணிக்கை பொருட்களை குப்பையில் வீசுவதை தடுத்து, அந்த பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து மீண்டும் கோவிலுக்கே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பூமாலைகளில் இருந்து உதிரி பூக்களை பிரித்து மண்ணில் மட்க செய்து உரமாக்கலாம். அதனை கோவில் வளாகத்தில் உள்ள தோட்ட தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். இல்லையெனில், பூக்களில் இருந்து ஊதுவத்தி, சாம்பிராணி செய்து மீண்டும் கோவில்களை மணக்க செய்யலாம். இல்லையெனில், பூக்களில் இருந்து நறுமண ஆயில் கூட செய்யலாம். இந்த மறுசூழற்சி பணியை அந்தந்த கோவில்கள் வளாகத்தில் கோவில் நிர்வாகங்கள் எடுத்து செய்யலாம். இல்லையெனில், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக இந்த மறுசூழற்சியை செய்து மீண்டும் மதிப்பு கூட்டப் பொருளாக மாற்றும் பணியை கொடுக்கலாம். இதன் மூலம் பக்தர்களின் காணிக்கையும் வீணாக குப்பைக்கு செல்லாது. அவர்களது மனமும் நோகாது. இது தொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் முதற்கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவில்களில் காணிக்கையாக வரும் பூக்கள், மாலைகள், ஆடைகள் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இவை கைக்கு கிடைத்த பிறகு ஒவ்வொரு கோவில்களிலும் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் விரைவிலேயே அமல்படுத்தப்படும் என்றார்.

செயல் விளக்கம்

கோவில்களில் திடக்கழிவு மேலாண்மை குறித்த செயல் விளக்கம் நேற்று புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலைய துறை பொறுப்பு ஆணையர் கந்தசாமி, கோவில் மேலாளர் தயாபுரி, பீட்பேக் பவுண்டேஷன் தன்னார்வ அமைப்பு திட்ட இயக்குநர் ஜோதி பிரகாஷ் ஆகியோர் கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு காணிக்கை பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப் பொருட்கள் தயாரிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JAYAPRAGASAM M
செப் 16, 2025 10:50

Biogas may be produced using flower wastes and abishegam wastes. This gas may be used for heating/ cooking prasadam and or Electricity production


JAYAPRAGASAM M
செப் 16, 2025 10:31

The flower waste and Abhishekam wastes may be mixed together to produce biogas This gas may be used for cooking prasadam or heating or producing Electricity. The settled solid waste can be dried and used as Organic manure.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை