ஜாதி சான்றிதழ் வழங்க தாமதம் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
புதுச்சேரி: ஜாதி சான்றிதழ் வழங்க தாமதம் செய்வதை கண்டித்து புதிரை வண்ணார் சமூகத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரியில் தெற்கு சப் கலெக்டருக்குட்பட்ட பகுதிகளில் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து புதிரை வண்ணார் சமூகத்தினர் சங்க தலைவர் கூத்தன் தலைமையில் வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து, இது குறித்து கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து, முறையிட்டபோது, கல்வி, வேலைக்கு செல்லும்போது 1964ம் ஆண்டுக்கு முந்தைய ஆதாரங்களை கேட்கின்றனர். எனவே 2002 ஆண்டு பட்டியலில் சேர்க்கப்பட்ட எங்களிடம் 1964 முன் ஆதாரங்களை கேட்பது ஏன் என, தெரியவில்லை. இலவச கல்விக்காக விண்ணப்பிக்க ஜாதி சான்றிதழ் கேட்டு ஆறு மாதங்கள் ஆகிறது. எனவே கலெக்டர் தலையிட்டு மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, இலவச கல்விக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க கலெக்டர் குலோத்துங்கன், உத்தரவிட்டார். அதன்படி ஜாதி சான்றிதழ்களும் நேற்று மாலை 6.30 மணியளவில் தெற்கு சப் கலெக்டர் அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டன.