உயர் கல்வியில் உள் ஒதுக்கீடு இந்தாண்டு அமல்படுத்த கோரிக்கை
புதுச்சேரி: ஆரம்ப கல்வி முதல் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு உயர் கல்வி உள்ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி சென்டாக் மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கவர்னர், முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனு:புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச் சங்கம் கோரிக்கையை ஏற்று, அனைத்து உயர் கல்வியிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்த முதல்வர் மற்றும் கல்வி அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த உள் ஒதுக்கீட்டை ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அதில் காலி இடம் இருப்பின் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும். இந்த ஆணையை பின்பற்றி இந்த கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்க நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.