உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோர்க்காடு கோவில் நில மோசடி வழக்கு பல் மருத்துவ கல்லுாரி அலுவலர் கைது

கோர்க்காடு கோவில் நில மோசடி வழக்கு பல் மருத்துவ கல்லுாரி அலுவலர் கைது

புதுச்சேரி : கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் பட்டா பெற்று மோசடி செய்த வழக்கில், கோரிமேடு பல் மருத்துவ கல்லுாரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.வில்லியனுார் கோர்க்காடு பாலசுந்தர விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. ரூ.4 கோடி மதிப்புள்ள இந்த நிலத்திற்கு கடந்த 2008 மற்றும் 2011ம் ஆண்டுகளில் பட்டா கோரி சிலர் விண்ணப்பித்தனர். நிலம் கோவில் பெயரில் இருந்ததால் அப்போதைய செட்டில்மென்ட் அதிகாரிகள் பட்டா தர மறுத்துவிட்டனர்.இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செட்டில்மெண்ட் அதிகாரியாக இருந்த பாலாஜி, பட்டா வழங்க உத்தரவிட்டார். பின்னர் அவர் பதவி உயர்வு பெற்று மீன்வளத்துறை இயக்குநராக சென்று விட்டார். இந்நிலையில், லாஸ்பேட்டை கிருஷ்ணமூர்த்தி மனைவி லதா, பட்டா வழங்கும் உத்தரவை அமல்படுத்தி, தேசிய நெடுஞ்சாலை கையகப்படுத்திய இடத்திற்கு ரூ. 70 லட்சம் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தார்.கோவில் நிலத்திற்கு போலியாக பட்டா பெற முயற்சிப்பதாக நில அளவைத்துறை இயக்குநர் செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்.பி., மோகன்குமார் தலைமையிலான போலீசார், பட்டா வழங்க உத்தரவிட்ட பாலாஜி, லாஸ்பேட் ஏர்போர்ட் சாலை கிருஷ்ணமூர்த்தி மனைவி லதா, தட்சிணாமூர்த்தி மனைவி ஹேமலதா (எ) நந்தினி, சுந்தராம்பாள், லாஸ்பேட்டை சுவாமி சங்கரதாஸ் நகர், ஏர்போர்ட் சாலையைச் சேர்ந்த கோரிமேடு பல் மருத்துவக் கல்லுாரி அலுவலர் ராமமூர்த்தி, 57; ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கில் லதா, ராமமூர்த்தி, சுந்தராம்பாள் ஆகியோர் முன்ஜாமின் கோரி புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கோவில் நிலத்திற்கு பட்டா மாற்றி மோசடி செய்ததால், ஜாமின் வழங்கக்கூடாது என இந்து முன்னணி வழக்கறிஞர்கள் கிருஷ்ணராஜ், ஸ்ரீதர் வாதிட்டனர். அதனையேற்று முன்ஜாமின் மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசேகரன் தள்ளுபடி செய்தார்.அதனைத் தொடர்ந்து, கோரிமேடு பல் மருத்துவக் கல்லுாரி அலுவலர் ராமமூர்த்தியை நேற்று இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையிலான போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வழக்கில் தொடர்புடைய பாலாஜி, லதா, ஹேமலதா, சுந்தராம்பாள் ஆகியோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை