வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டையூ, டாமன் அல்ல .. அதன் சரியான உச்சரிப்பு திவ், தமன் ..
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் டிஜிட்டல் உணவு நாணய முன்னோடி விநியோக திட்டம் இன்று துவங்கப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்குவதில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் மற்றொரு பக்கம் முறைகேடுகள் நடந்து தான் வருகின்றன. இவற்றை தடுக்கும் வகையில், புதுச்சேரியில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய அடிப்படையிலான டிஜிட்டல் உணவு விநியோக முன்னோடித் திட்டம் இன்று 26ம் தேதி காலை 10:00 மணிக்கு கம்பன் கலையரங்கில் துவங்கப்பட உள்ளது. பொது விநியோக முறையை நவீனப்படுத்தவும், உணவு மானிய விநியோகத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் இத்திட்டத்தை மத்திய குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோருடன் இணைந்து துவக்கி வைக்க உள்ளார். டிஜிட்டல் டோக்கன்கள் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் டிஜிட்டல் ரூபாயின் ஒரு வடிவமாக பயனாளிகளின் டிஜிட்டல் வாலட்டில் உணவு மானியம் 'புரோகிராம் செய்யக்கூடிய டோக்கன்களாக' வரவு வைக்கப்படும். இந்த டிஜிட்டல் கூப்பன்களை அங்கீகரிக்கப்பட்ட ரேஷன் கடைகளில் மட்டுமே உணவு, தானியங்களை வாங்க பயன்படுத்த முடியும். வேறு எந்தத் தேவைக்கும் இதைப் பயன்படுத்த முடியாது. இதற்கான செயலியை பொதுமக்கள் டவுண்லோடு செய்ய வேண்டி இருக்கும். இதனை பிரபல வங்கியுடன் இணைந்து மத்திய, மாநில அரசுகள் அறிமுகம் செய்ய உள்ளன. பரிவர்த்தனை முறை இந்த செயலியை டவுண்லோடு செய்த பிறகு ரேஷன் கடை பயனாளிகள் கடையிலுள்ள கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமோ அல்லது வவுச்சர் குறியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலமோ தங்களுக்குறிய ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு வசதிகள் புதுச்சேரி ரேஷன் கடைகளில் ஏற்படுத்தப்பட உள்ளன. இதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் டிஜிட்டலாக மாற உள்ளன. முதற்கட்டமாக சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் இந்த டிஜிட்டல் விநியோகம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்னபூர்த்தி தானிய ஏ.டி.எம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தானியங்கி தானிய ஏ.டி.எம்., அறிமுகப்படுத்தப்படும். இது 25 கிலோ தானியத்தை வெறும் 35 வினாடிகளில் வழங்கும் திறன் கொண்டது. வரிசையில் நிற்காமல் பொதுமக்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதை போன்று எடுக்க முடியும். திட்டத்தின் நன்மைகள் மானியத் தொகை தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதை தடுத்து, அது உரிய பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்கிறது. கைரேகை சரிபார்ப்பில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளால் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை இது குறைக்கிறது. ரேஷன் கடை உரிமையாளர்களுக்கு அவர்களின் கமிஷன் தொகை உடனுக்குடன் டிஜிட்டல் முறையில் வரவு வைக்க முடியும். குஜராத் முன்னோடி: கடந்தாண்டு குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையால் காந்தி நகரில் பரிசோதனை அடிப்படையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இது முதற்கட்டமாக அகமதாபாத், சூரத், ஆனந்த் மற்றும் வல்சாத் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தையடுத்து இப்போது யூனியன் பிரதேசங்களுக்கு முன்னோடியாக புதுச்சேரியில் துவக்கி வைக்கப்பட உள்ளது. அடுத்து சண்டிகர் மற்றும் தாதர் நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
டையூ, டாமன் அல்ல .. அதன் சரியான உச்சரிப்பு திவ், தமன் ..