நேருவை கைவிட்ட காங்., ஆதரவாளர்கள் அதிருப்தி
உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு. இவர், கடந்த 2011 தேர்தலில் என்.ஆர்.காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் குறைந்த 1,500 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். 2021ம் ஆண்டு சுயேச்சையாக களம் இறங்கி வெற்றி பெற்றார்.இவர் சமூக அமைப்புகளுடன் சேர்ந்து, ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டி காட்டி போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சியாக இண்டியா கூட்டணி காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சமூக அமைப்புகளுடன் ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ரவுடிகளால் வியாபாரி தாக்கப்பட்ட விவகாரத்தில், சபாநாயகர் செல்வத்திற்கும், நேரு எம்.எல்.ஏ.,வுக்கு சட்டசபையில் நேருக்கு நேர் வாக்குவாதம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த நாளே, சட்டசபை உறுதி மொழி தலைவர் பதவியில் இருந்து நேரு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பாஸ்கர் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டார்.சபாநாயகரின் இச்செயலை மா.கம்யூ., மட்டுமே கண்டன அறிக்கை வெளியிட்டது. இண்டியா கூட்டணி மற்றும் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கத்திடம் இருந்து எவ்வித கண்டனக் குரலும் வரவில்லை. இது, வைத்திலிங்கம் எம்.பி, வெற்றிக்காக பாடுபட்ட, நேரு எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.