தலைமை தேர்தல் அதிகாரி ஜவகரிடம் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் மனு
புதுச்சேரி: புதுச்சேரி தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகரிடம் மனு வழங்கினார். மனுவில், 'இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, சிறப்பு வாக்காளர் திருத்தம் பணி நடந்து வருகிறது. அதில் தேர்தல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டும் பாகமுகவர்கள் நியமிக்கப்பட்டு, அரசால் நியமிக்கப்பட்ட ஓட்டுச் சாவடி நிலை அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பு வாக்காளர் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு, புதிதாக துவங்கிய கட்சி பெயர் மற்றும் கொடியுடன் அவருடைய புகைப்படத்தை அச்சிட்டு, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் சட்ட விதியினை மீறி அங்கன்வாடி, ஆசிரியர்கள், உதவியாளர்களை அழைத்து அவருடைய அங்கீகரிக்கப்படாத கட்சியின் நோட்டீசை கொடுத்து தேர்தல் பணி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இது இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நீத்து போக செய்துள்ளது. வாக்காளர்களை குழப்பும் விதமாக பி.எல்.ஓ.,க்களின் தொலைபேசி எண்களுடன் அவருடைய அங்கீகரிக்கப்படாத கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் துறையின் பாக முகவர்கள் போல் நோட்டீஸ் அச்சடித்து விநியோகம் செய்து வருகின்றனர். எனவே, தேர்தல் ஆணைய உத்தரவுகளை மீறி செயல்படும் சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு மீது இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.