மத்திய அமைச்சர் விழாவால் டிராபிக்ஜாம் :தி.மு.க., மாநில அமைப்பாளர் கண்டனம்
புதுச்சேரி: மத்திய அமைச்சர் நிகழ்ச்சிக்கு, அரசு உரிய போக்குவரத்து மாற்று ஏற்பாடு செய்யாமல், மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியதற்கு தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் உணர்வுகளோடு தொடர்புடைய தமிழ்த்தாய் வாழ்த்தை பாடாமல் புறக்கணித்தது கண்டத்திற்கு உரியது. அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக வெகு நேரம் நின்றிருந்த போலீசார் பலர் மயங்கி விழுந்தது கவலைக்குறியது. இவர்களின் உடல் நலம், பணிச்சூழல் குறித்து உரிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அமைச்சர் நிகழ்ச்சிக்காக, புதுச்சேரி நகரில் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் முறையாக செய்யாததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அனைத்திற்கும் மேலாக, பா.ஜ., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் பங்கேற்றது ஏற்புடையதல்ல. மக்களின் உணர்வுகளையும், காவலர்களின் நலனையும், மக்களின் அன்றாட போக்குவரத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.