உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியின் நெசவு கிராமம் எது தெரியுமா? அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...

புதுச்சேரியின் நெசவு கிராமம் எது தெரியுமா? அந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...

புதுச்சேரி மாநிலம் இன்றைக்கு சுற்றுலா வருவாயை பெரிதாக நம்பிக்கொண்டு இருக்கலாம். வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பின்னோக்கி பார்த்தால் புதுச்சேரி நெசவு தொழிலில் கோலோச்சி உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததை காண முடிகிறது. அரிக்கமேட்டில் இருந்த சாய தொட்டிகளே இதற்கு மவுன சாட்சிகளாக உள்ளன. அடுத்து வந்த பிரெஞ்சியர்களும் புதுச்சேரியின் நெசவு தொழிலின் வளமை கண்டு, அதனை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திட்டனர்.அப்போதைய பிரெஞ்ச் ஆட்சியரின் காலத்தில் பிரான்சுவா மர்த்தேன் 1674ல் புதுச்சேரிக்கு வந்தது முதல் நெசவு தொழிலுக்கு மிகப் பெரிய முக்கியத்துவத்தை அளித்தார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நெசவாளர்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து குடியமர்த்தினார். குறிப்பாக முத்தியால்பேட்டையை தேர்வு செய்து தெருக்களை அமைத்து அவர்களை அங்கு தங்க செய்தார். காங்கு என்ற ஒரு வகை நீலத் துணிக்கு உலகம் முழுதும் மவுசு. பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளுக்கு புதுச்சேரியில் இருந்து இந்த துணி ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்கான நீலசாய கிடங்குகள் முத்தியால்பேட்டையில் ஏற்படுத்தப்பட்டன.புதுச்சேரியின் 1748ம் ஆண்டின் வரைபடத்தில் முத்தியால்பேட்டை நெசவாளர் கிராமம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 18ம் நுாற்றாண்டில் புதுச்சேரியின் மக்கள் தொகை 30 ஆயிரத்தை தொட்டு இருந்தது. இதில் 15 ஆயிரம் பேர் வரை நெசவாளர்களே இருந்துள்ளனர். அதாவது மொத்த தொகையில் 50 சதவீதம் பேர் நெசவாளர்கள் தான் இருந்துள்ளனர். இவர்கள் நெசவு தொழிலில் மட்டுமின்றி, இந்து மதத்தின் பாதுகாவலர்களாகவும் பிரெஞ்சியர் காலத்தில் இருந்துள்ளதையும் வரலாற்று பக்கங்களில் பார்க்க முடிகிறது.கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் மேள வாத்தியங்கள் முழங்க கூடாது; சுவாமி புறப்பாடு நடத்த கூடாது என்று கவர்னர் பிரான்சுவா மர்த்தேன் உத்தரவு ஒன்றினை பிறப்பித்தார். இந்த உத்தரவு ஒட்டுமொத்த நெசவாளர்களை கொந்தளிக்க செய்தது. கவர்னருடைய உத்தரவினை நெசவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கவர்னரின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அனைவரும் புதுச்சேரியை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர்.இதையறிந்த கவர்னர் பிரான்சுவா மர்த்தேன் பதறினார். நெசவாளர்கள் இல்லாமல் எப்படி வியாபாரம் நடக்கும்; அயல்நாடுகளில் ஏற்றுமதி செய்ய முடியும் என்று கவலை அவரை ஆட்கொண்டது. உடனடியாக தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். வெளியேறிய நெசவாளர்களை மீண்டும் புதுச்சேரிக்கு அழைத்து வர உத்தரவிட்டார். கவர்னரின் அழைப்பினை ஏற்று திரும்பி வந்த நெசவாளர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிகின்ற ஊர்களில் மத சுதந்திரம் இருப்பதை போன்று புதுச்சேரியிலும் முழு மத சுதந்திரம் எங்களுக்கு வேண்டும் என்று ஒற்றை கோரிக்கையை முன் வைத்தனர்.அப்படியே ஆகட்டும். உங்களுக்கு முழு மத சுதந்திரம் உண்டு. நீங்கள் மீண்டும் புதுச்சேரியில் நெசவு தொழிலினை ஆரம்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்படியே மீண்டும் முத்தியால்பேட்டையில் நெசவாளர்கள் குடியேறி நெசவு தொழிலை தொடர்ந்தனர். பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் நெசவு தொழிலில் பெரும் சக்தியாகவும், இந்து மதத்தின் பாதுகாவலனாகவும் விளங்கிய முத்தியால்பேட்டை இன்றைக்கு கைத்தறி ஓசையின்றி தனது வரலாற்று பெருமையை இழந்து நிற்கின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ