போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
புதுச்சேரி ; இணைய வழியில் வரும் போலி விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.புதுச்சேரியில் சைபர் கிரைம் கும்பல் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், சைபர் கிரைம் கும்பலிடம் ஏமாறாத நாட்களே என்ற நிலை வந்து விட்டது. குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில், தினசரி பலர் ஏமாந்து பணத்தை இழந்து வருகின்றனர்.நேற்று முன்தினம், புதுச்சேரி நபருக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி, அதற்கு பிராஸசிங் கட்டணம் என, 43 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு, கடன் வழங்காமல் ஏமாற்றி உள்ளனர்.பேஸ்புக்கில் வரும் விளம்பரத்தை நம்பி ஒருவர் ஆன்லைனில் ரூ. 4,000க்கு டி-சர்ட் ஆர்டர் கொடுத்துள்ளார். ஆனால் டி-சர்ட் அனுப்பாமல் ஏமாற்றி உள்ளனர்.இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ரூ. 550க்கு போன் கவர் ஆர்டர் செய்து பொருள் அனுப்பாமல் ஏமாற்றி உள்ளனர்.பழைய நாணயங்களை வாங்கிக் கொண்டு நிறைய பணம் தருவதாக கூறிய மர்ம நபர், பிராஸசிங் கட்டணம் என ரூ. 1,500 வாங்கி ஏமாற்றி உள்ளார். இதுபோல் வேலை வாய்ப்பிற்காக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என கூறி அதற்கு கட்டணமாக ரூ. 31 ஆயிரம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்; இணைய வழியில் வரும் வேலை வாய்ப்பு, அதிக வருமானம், டிஜிட்டல் அரஸ்ட், லோன் ஆப் உள்ளிட்டவற்றை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளனர்.