உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.5 கோடி கேட்டு வரதட்சணை கொடுமை: தொழிலதிபர் மகள் புகாரில் 3 பேர் மீது வழக்கு

ரூ.5 கோடி கேட்டு வரதட்சணை கொடுமை: தொழிலதிபர் மகள் புகாரில் 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: திருமணத்தின்போது கொடுத்த 100 சவரன், 12 கிலோ வெள்ளி, பி.எம்.டபிள்யூ கார், வீட்டு உபயோக பொருட்கள் போதாது என, கூடுதலாக ரூ.5 கோடி, நகை, சொத்து என வரதட்சணை கேட்டு வன்கொடுமை செய்ததாக தொழிலதிபர் மகள் கொடுத்த புகாரின் பேரில், கணவர், மாமியார், மாமனார் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, வாழைகுளம், குபேர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி; கான்ட்ராக்டர். இவரது மகள் அபர்ணா (எ) ஈஸ்வரி,28: இவருக்கும், இளங்கோ நகர் பிரதீப்குமார் என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. அப்போது, அபர்ணாவிற்கு சீர்வரிசையாக அவரது பெற்றோர் 100 சவரன் நகை, 12 கிலோ வெள்ளி பொருட்கள், பி.எம்.டபுள்யூ., கார் தந்தனர். ஒரு மாதத்தில் அபர்ணா கர்ப்பமடைந்த நிலையில், பிரதீப்குமார் துன்புறுத்தினார். மேலும், அபர்ணாவை அவரது தாய் வீட்டில் இருந்து 10 சவரன் நகையை வாங்கி வருமாறு பிரதீப்குமாரின் தாய் லட்சுமி, தந்தை செந்தில்குமார் ஆகியோர் கட்டாயப்படுத்தினர். இந்நிலையில் அபர்ணாவிற்கு கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விநாயகமூர்த்தி தங்க கொலுசு மற்றும் தங்க செயின் அளித்தார். அதுபோதாது என பிரதீப்குமார் மற்றும் அவரது பெற்றோர் ரூ.10 லட்சம் கேட்டனர். மேலும், புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள இடத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு பிரதீப்குமார் துன்புறத்தினர். பின், 2023ம் ஆண்டு பிரதீப்குமார், வியாபாரத்திற்காக அவரது தந்தையிடம் ரூ.5 கோடி வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு மறுத்த அபர்ணாவை, பிரதீப்குமார் மற்றும் அவரது பெற்றோர் திட்டி, அடித்து துன்புறுத்தினர். கடந்த 2024ம் ஆண்டு வேலை காரணமாக பிரதீப்குமார் சென்னைக்கு குடி பெயர்ந்தார். அவருடன் அபர்ணாவும் சென்றார். அந்தாண்டு பெய்த கனமழையில் பி.எம்.டபுள்யூ கார் பழுதானது. அதனால், புதிய கார் வாங்கி தருமாறு பிரதீப்குமார் வற்புறுத்தினார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பிரதீப்குமார் மொபைல் போனில் பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது குறித்து அபர்ணா கேட்டதற்கு, நான் கேட்ட தங்க நகை, நிலம், ரூ.5 கோடி பணத்தை வாங்கி வராததால் அப்படி செய்ததாகவும், அதை கேட்கக்கூடாது என, துன்புறுத்தினார். இதுகுறித்து மாமனார், மாமியாரிடம் கேட்டதும், அவர்களும் கேட்ட நகை, பணம், இடத்தை வாங்கி வராத நீ, அதைப்பற்றியெல்லாம் கேட்கக்கூடாது என திட்டி, துன்புறுத்தினர். இதனால், விரக்தியடைந்த அபர்ணா கடந்த மார்ச் மாதம் தனது குழந்தையுடன் தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். பின், நடந்த சம்பவங்கள் குறித்து கடந்த மார்ச் 19ம் தேதி புதுச்சேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அபர்ணாவின் புகார் மனுவை, போலீசார் வரதட்சணை தடுப்பு பிரிவிற்கு அனுப்பினர். அவர்கள், விசாரித்து, புகார் உண்மை என கடந்த ஜூலை 26ம் தேதி அறிக்கை அளித்ததை தொடர்ந்து, பிரதீப்குமார், அவரது தாய் லட்சுமி, தந்தை செந்தில்முருகன் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி