போதை ஸ்டாம்பு விற்றவர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்பு விற்றவரை போலீசார் கைது செய்தனர். ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் இரவு சோனாம்பாளையம் சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது, பொதுப்பணித்துறை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே வாலிபர் ஒருவர், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார், சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர், 18 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் 10 எல்.எஸ்.டி (ஸ்டாம்பு) போதை பொருளை விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தார். விசாரணையில், வைத்திக்குப்பம் மோகன் மகன் சந்தோஷ், 25, என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்பை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.