போலீஸ் மக்கள் மன்றத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் டி.ஜி.பி.,யிடம் முதியவர் மனு
புதுச்சேரி: மகனிடம் இருந்து வீட்டை மீட்டு தரக்கோரி மக்கள் மன்றத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விரக்தியடைந்த முதியவர் நேற்று டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தார்.புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,77; இவரது மனைவி புவனாவதி. கடந்தாண்டு இறந்துவிட்டார். அதனால், ஆறுமுகம் மூத்த மகன் கோவலன் வீட்டில் ஒரு மாதமும், அடுத்த மாதம் இளையமகன் ஆனந்தவேல் வீட்டில் வசித்து வருகிறார்.அவ்வாறு கடந்த 11ம் தேதி ஆறுமுகம், மூத்த மகன் வீட்டில் இருந்து இளையமகன் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த சின்ன மருமகள், ஆறுமுகத்தை வீட்டில் உள்ளே விடாமல், வெளியே விரட்டி விட்டார். மேலும், அவரது இளைய மகன் போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரக்கூடாது என மிரட்டினார்.இதுகுறித்து ஆறுமுகம் சோலை நகர் போலீசில் புகார் அளித்தார். அதில் நடவடிக்கை இல்லாததால், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றத்தில் புகார் அளித்தார். ஓரிரு நாட்களில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதன்படி ஒரு வாரத்திற்கு பிறகு போலீசார், ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ஆனந்தவேல் தரப்பினரை அழைத்து விசாரித்தனர்.அதில், ஒரு வாரத்தில் வீட்டு சாவியை ஆறுமுகத்திடம் ஒப்படைப்பதாக இளையமகன் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இதுவரை சாவியை ஒப்படைக்கவில்லை. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசில் ஆறுமுகம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.அதனால், விரக்தியடைந்த ஆறுமுகம் நேற்று, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு சென்று, இளையமகன் ஆனந்தவேலுவிடம் இருந்து தனது வீட்டை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தார்.