காசோலை மோசடி வழக்கில் முதியவருக்கு ஓராண்டு சிறை
புதுச்சேரி :காசோலை மோசடி வழக்கில் முதியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.முதலியார்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன், 56. தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2017ம் ஆண்டு கரையாம்புத்தூர் அடுத்த ராம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன், 70, என்பவருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்தார். அந்த பணத்தை அவர் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.இதற்கிடையே அவர் தான் கொடுக்க வேண்டிய தொகைக்காக காசோலையை வழங்கினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது அவரது கணக்கில் போதிய தொகை இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து வெங்கடேசன் புதுச்சேரி காசோலை மோசடி விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி சத்தியன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப் பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்ரமணியன் ரூ.15 லட்சத்தை திரும்பி வழங்கவும், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கியும் நீதிபதி தீர்ப்பளித்தார்.