மகளும் மருமகனும் மயங்கி விழுந்த அதிர்ச்சியில் மூதாட்டி பலி
புதுச்சேரி: மகள், மருமகன் மயங்கி விழுந்ததை கண்ட மூதாட்டி அதிர்ச்சியில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்தவர் வசந்தா, 71. இவரது கணவர் இறந்து விட்டதால், சில நாட்கள் லாஸ்பேட்டையில் மகன் வீட்டிலும், பூமியான்பேட்டையில் உள்ள மகள் வீட்டிலும் மாறி, மாறி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மகள் வீட்டில் வசந்தா தங்கி இருந்தபோது, கோவில் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த அவரது மருமகன் ரவிச்சந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். இதைகண்ட அவரது மனைவியும் மயங்கி விழுந்ததால், அதிர்ச்சியடைந்த வசந்தா இதுகுறித்து தனது பேரன் பிரசன்னகுமாருக்கு மொபைல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். பிரசன்ன குமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் 3 பேரும் மயங்கி கிடந்துள்ளனர். இதையடுத்து, மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, டாக்டர் பரிசோதனை செய்தபோது, வசந்தா இறந்து விட்டதாக தெரிவித்தார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மகள், மருமகன் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததை கண்ட அதிர்ச்சியில் மூதாட்டி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.