உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் சிறப்பிடம்

ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் சிறப்பிடம்

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப்பள்ளி ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 166 மாணவர்களும் தேர்ச்சி பெற்று தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். மாணவி தீபஸ்ரீ 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தார்.மாணவி சோபனா 495 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடமும், பள்ளியளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். மாணவிகள் அஷ்விணி, தக் ஷயா 492 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.பள்ளியில் 21 மாணவர்கள் 475 மதிப்பெண்ணிற்கு மேலும், 56 பேர் 450க்கு மேலும், 101 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.பாடவாரியாக ஆங்கிலத்தில் ஒருவர், அறிவியலில் 9 பேர், சமூக அறிவியலில் 6 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழில் 9 பேர், கணிதத்தில் 2 பேர் 100க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாணவி ஹேமலட்சுமி 593 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மொத்த மாணவர்களில் 16 பேர் 550க்கு மேலும், 47 பேர் 500க்கு மேலும், 90 பேர் 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவி தீபஸ்ரீ, பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளி நிர்வாகி அழகப்பன், ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கி வாழ்த்தினார். பள்ளி நிர்வாகி அழகப்பன் கூறுகையில், 'பொதுத்தேர்வுகளில் நகரப்பகுதி பள்ளிகள் மட்டுமே மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து வந்தது. தற்போது அதனை மாற்றி, கிராமப்புற பள்ளியான எமது பள்ளி மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற சாதனை இப்பள்ளி தொடர்ந்து கொடுக்கும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணச் சலுகை வழங்கப்படும். இக்கல்வியாண்டு முதல் நமது பள்ளியில் நீட், ஜே.இ.இ., தேர்விற்கு இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இந்த மாபெரும் சாதனைக்கு ஒத்துழைத்த ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

மொபைல் போனை தவிருங்கள்

மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவி தீபஸ்ரீ கூறுகையில், 'ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பதே எனது கனவு. லட்சியத்தை அடையும் வரை ஓயாமல் உழைப்பேன். மாநில அளவில் சிறப்பிடம் வந்தது மகிழ்ச்சி. இதேபோல், அனைவரும் வர வேண்டும். அதற்கு படிக்கும் வயதில் மொபைல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.எனது இந்த சாதனைக்கு பக்கபலமாக இருந்த எனது பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ