நிதி ஆண்டு கணக்கு சமர்ப்பிப்பு ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு
புதுச்சேரி : நிதி ஆண்டு கணக்கு சமர்பிப்பதால், நிதித்துறை ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் 3 நாட்கள் பணிக்கு வரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:நடப்பு நிதி ஆண்டு 2024-25, மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனையொட்டி, கணக்கு மற்றும் கருவூலகத்துறை உட்பட அனைத்து நிதித்துறையின் பிரிவுகளும், நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக் கிழமை, மற்றும் நாளை ரம்ஜான் தினமான 31ம் தேதி திங்கள் கிழமை ஆகிய மூன்று நாட்களும் செயல்படும்.இந்த நிதி ஆண்டுக்கு வழங்கப்பட்ட நிதியின் செலவுகள் விபரங்களை பதிவு செய்வது உட்பட பட்ஜெட் செயல்முறையை, அரசு துறைகள் முடிப்பதற்கு வசதியாக இருக்கும். நிதித்துறை, கணக்கு மற்றும் கருவூலகத்துறை அனைத்து பிரிவுகளின் அதிகாரிகள், பணியாளர்கள் நாளை 31ம் தேதி வரை விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திற்கு வரவேண்டும். இந்த விடுமுறை நாள் பணிக்கு பதிலாக, நடைமுறையில் உள்ள விதிகளின் படி வரும் ஏப்ரல் மாதத்தில் 3 நாட்கள் ஈடு செய்யும் வகையில் விடுப்பு பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.