தனியார் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : நமச்சிவாயம் தகவல்
புதுச்சேரி: தனியார் துறையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். அவர், கூறியதாவது: இந்திரா சதுக்கத்தில் இருந்து ராஜிவ் சதுக்கம் வரை மேம்பாலம் அமைப்பதற்கு மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் ரூ.436 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மரப்பாலம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.100 கோடி அளவில் மேம்பாலம் அமைக்கவும், மரப்பாலம் முதல் முள்ளோடை வரை ரூ.662 கோடியில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த ஒப்புதல் வழங்கப்படும் என, மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்காக பிரதமர், மத்திய அமைச்சருக்கு நன்றி. பல்வேறு அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதுபோல், தனியார் துறையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளில் படித்து வெளி வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. சோகோ நிர்வாகத்தின் தலைவரை தென்காசியில் நேரடியாக சந்தித்து புதுச்சேரியில் ஆண்டுக்கு 7 ஆயிரம் பொறியியல் மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அவர்களுக்குரிய வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கு புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சென்டரை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 2 தினங்களுக்கு முன் சோகோ நிறுவனத்தின் குழு, புதுச்சேரிக்கு வந்து ஆய்வு செய்துள்ளது. சமூக பங்களிப்பின் மூலம் பட்டம் படித்த மாணவர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி அளிப்பதற்கு குவாண்டம் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விரைவில் அந்த நிறுவனம் மூலம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி ஆரம்பிக் கப்பட இருக்கிறது' என்றார்.