புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் தொண்டர்களுக்கு உற்சாக வரவேற்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் 4.4 கி.மீ., தொலைவிற்கு நடந்தது.விஜயதசமியை முன்னிட்டு அக்., 6ம் தேதி புதுச்சேரி,தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடக்கும் என அந்த அமைப்பு அறிவித்தது. அதன்படி, புதுச்சேரியில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு இடையே ஊர்வலம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு முத்தியால்பேட்டை சின்ன மணிக்கூண்டு அருகே ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் துவங்கியது. ஓய்வு பெற்ற எஸ்.பி., சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பாரத மாதா சிலை முன்னே செல்ல ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சீருடையில் அணி வகுத்தனர். ஊர்வலம் மகாத்மா காந்தி வீதி, அஜந்தா சிக்னல், நேரு வீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி, செஞ்சி சாலை, அரசு பொதுமருத்துவமனை, பாரதி பூங்கா வழியாக காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.4.4 கி.மீ.,தொலைவிற்கு நடந்த ஊர்வலத்திற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரதமாதா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.பேரணியில் பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சாய்சரவணன்குமார், அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தையொட்டி 1,500க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காந்தி சிலை அருகே ஆர்.எஸ்.எஸ்., பொதுக்கூட்டம் நடந்தது.