ஓட்டல்கள் பெயரில் போலி இணையதளம் ஆன்லைன் மோசடி கும்பல் பணம் பறிப்பு
புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஓட்டல் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடி கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. இதையொட்டி, வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.இதன் காரணமாக, புதுச்சேரியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள்நிரம்பி வழிந்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.இதை பயன்படுத்தி, ஆன்லைன் மோசடி கும்பல் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள முக்கிய ஓட்டல்களின் பெயரில் பொய்யான இணையதளத்தை மோசடி கும்பல் உருவாக்கியுள்ளது.அந்த இணையதளத்தில் முன்பதிவு செய்யும் சுற்றுலாப் பயணிகளிடம் முன்பணம் செலுத்தக் கூறி மோசடியில்ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று, கடந்த சில தினங்களில் மட்டும் புதுச்சேரியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், ஓட்டலின் போலியான இணையதளத்தில் முன்பணம் செலுத்தி 5 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளனர்.இதேபோல் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் லட்சக்கணக்கில் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர்.இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆன்லைனில் தங்கும் விடுதிகளை தேடும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து, மோசடி கும்பல் ஓட்டல்களின் போலியான இணையதளத்தை உருவாக்கி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட துவங்கியுள்ளனர். எனவே, சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்யும் முன் ஓட்டல் இணையதளத்தின் உண்மை தன்மையை கண்டறிந்து முன் பணம் செலுத்த வேண்டும்.இதுபோன்றமோசடி கும்பலின் பொய்யான இணையதளத்தை உடனடியாக நீக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.