அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் முறையீடு
புதுச்சேரி : மூன்று நாட்களாக வடியாத வெள்ளத்தால், கத்தரி, மரவள்ளி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் பாழாகி விட்டதாக விவசாயிகள் மத்திய குழுவினர் முறையிட்டனர்.பெஞ்சல் புயல் கன மழையால் 10 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. நெற்களஞ்சியமான பாகூரில் 20க்கும் மேற்பட்ட கிராம விவசாய நிலங்கள் முழுதும் வெள்ளத்தில் மூழ்கி பாழானது.நேற்று பாகூர் சுற்றுவட்டார பகுதியை பார்வையிட்ட மத்திய குழுவினரிடம், சித்தேரி பகுதி விவசாயிகள் அழுகிய நெற்பயிர்கள், இஞ்சி, மஞ்சள், கத்திரிக்காய் உள்ளிட்ட தோட்ட பயிர்களை காண்பித்து பாதிப்புகளை முறையிட்டனர். மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை குறைவு. இப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு மட்டும் 9 லட்சம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாய நில இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.