உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சி பெண் எம்.எல்.ஏ.,வின் மாஜி கணவர் வீடியோ வெளியீடு

என் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சி பெண் எம்.எல்.ஏ.,வின் மாஜி கணவர் வீடியோ வெளியீடு

புதுச்சேரி : தன் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சி நடப்பதாக பெண் எம்.எல்.ஏ.,வின் மாஜி கணவர் சமூக வலை தளங்களில் வீடியே வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் சண்முகம். முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்காவின் மாஜி கணவர். இவர், கடந்த 29ம் தேதி கொடுத்த கொலை மிரட்டல் புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார், சந்திரபிரியங்காவின் உறவினரும், என்.ஆர்.காங்., இளைஞரணி நிர்வாகியுமான நெடுங்காட்டை சேர்ந்த ஈஸ்வரராஜ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தன் மீது வழக்கு பதிவு செய்ய ஈஸ்வரராஜ் முயற்சித்து வருவதாக, சண்முகம் நேற்று சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: நெடுங்காடு தொகுதியை சேர்ந்த சந்தானராஜ் எனக்கு இரு வாரங்களுக்கு முன் வாட்ஸ் ஆப்பில் 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்பினார். அதில் ஈஸ்வரராஜ் ஆபாசமாக பேசியிருந்தார். இதுகுறித்து சந்தானராஜிடம் கேட்டபோது, காரைக்காலில் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., விருந்து அளித்தபோது, சந்தானராஜ் போனை, ஈஸ்வரராஜ் பார்த்துள்ளார். அதில், எனது பிறந்த நாளுக்கு 'லைக்' போட்டதற்காக அவரை திட்டிவிட்டு, போனை வாங்கி, அதில் என்னை ஆபாசமாக திட்டி மெசேஜ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து நான் டி.ஜி.பி.,யிடம் அளித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் கடந்த 30ந் தேதி வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நெடுங்காடு தொகுதியில் என் மீது வழக்கு தொடர முயற்சி நடைபெற்று வருகிறது. எனக்கும், சந்திரபிரியங்காவுக்கும் விவகாரத்தாகி 2 ஆண்டாகிறது. அவர்கள் தரப்பில் யாருடனும் நான் பேசுவதில்லை. தேவையின்றி என்மீது வழக்கு பதிய முயற்சிக்கின்றனர். தற்போது லாஸ்பேட்டையில் எனது தாயாருடன் உள்ள நிலையில், தேவையின்றி தொந்தரவு தருகின்றனர். எம்.எல்.ஏ.,வுடன் இருப்பவர்கள் தான் வாய்ஸ் மெசேஜ் தருகின்றனர். இதை அவர் கண்டிக்கவில்லை. அவர்கள், என் மீது புகார் தந்தால், ஒத்துழைப்பு தர தயாராக உள்ளேன். புகாரை விசாரியுங்கள். 2023 முதல் அவர்கள் தரப்பில் நான் பேசியதில்லை. அரசியல் ரீதியாக தாக்கும் எண்ணம் இல்லை. மிரட்டல் எனக்குதான் உள்ளது. விவகாரத்து பெறும்போது, அவரை பற்றி நானோ, என்னை பற்றி அவரோ பேசக்கூடாது என கையெழுத்திட்டுள்ளோம். அவரது ஆதரவாளர்கள் மீதுதான் நான் புகார் தந்துள்ளேன். அவர் மீது அல்ல. அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். எனது குழந்தைகளை பார்க்கவும், காரைக்கால் சென்று வர அரசு நீதி வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ