முதியோர் உதவித்தொகை பெற போலியாக தாசில்தார் கையெழுத்து
வில்லியனுார்: மங்கலம் தொகுதியில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு போலியாக தாசில்தார் கையெழுத்து போடப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.மங்கலம் தொகுதி ஆனந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவர், தனது மகன் மேற்படிப்பிற்கு, சென்டாக் மூலம் விண்ணப்பிக்க வருவாய் துறையின் சாதி, குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ் வேண்டி வில்லியனுார் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதில், ஏற்கனவே அலுவலகம் மூலம் பெறபட்ட சாதி சான்றிதழ் நகல், கடந்த இரு மாதத்திற்கு முன்பு சமூக நலத்துறை மூலம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து பெற்ற சான்றிதழ் நகலையும் இணைத்து கொடுத்துள்ளார்.அந்த சான்றிதழ் நகலில் இருந்த சீல் மற்றும் தாசில்தார் கையெழுத்து மாறுபட்டு இருந்ததால் சந்தேகமடைந்த தாசில்தார் சேகர், அந்த சான்றிதழை சரிபார்க்க உத்தரவிட்டார். அதில், சான்றிதழ் நகலில் இருந்தது போலியாக போடப்பட்ட தாசில்தார் கையெழுத்து என உறுதியானது.இதுகுறித்து தாசில்தார் சேகர், புதுச்சேரி கலெக்டர் மற்றும் மாவட்ட துணை கலெக்டருக்கு தகவலை தெரிவித்தார். தொடர்ந்து, சமூக நலத்துறை அதிகாரிகளிடம் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள பயனாளிகளின், சான்றிதழ்களை உண்மை தன்மை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின், உதவி தொகை வழங்க வேண்டும். அதுவரை நலத்திட்ட உதவிகள் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என, புகார் மனு அளித்துள்ளார்.இச்சம்பவம் வில்லியனுார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வில்லியனுார் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரியூர் வருவாய் கிராமத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு மட்டுமல்லாமல் பல்வேறு அரசு நலத்திட்டதிற்கான சான்றிதழ்களில் போலி கையெழுத்து போட்டு கொடுத்து வருவது வில்லியனுார் தாசில்தார் அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கண்டுபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.