உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கரசூர் தொழிற்பேட்டை விவகாரத்தில் மாஜி அமைச்சர்... திடீர் போர்க்கொடி: சட்டசபை வளாகத்தில் இன்று உண்ணாவிரதம்

கரசூர் தொழிற்பேட்டை விவகாரத்தில் மாஜி அமைச்சர்... திடீர் போர்க்கொடி: சட்டசபை வளாகத்தில் இன்று உண்ணாவிரதம்

புதுச்சேரி, ஊசுடு தொகுதி கரசூர் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, பார்மா தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தொழிற்பேட்டை விவகாரத்தில், திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ள தொகுதி எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் சாய்சரவணன் குமார், இன்று (6ம் தேதி ) உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கரசூர் தொழிற்பேட்டை எனது தொகுதியில் அமைந்துள்ளது. இந்த தொழிற்பேட்டைக்காக எனது தொகுதியை சேர்ந்த பலர் தங்களது 600 ஏக்கர் நிலத்தை இழந்துள்ளனர். வாழ்வாதரத்தை இழந்த அந்த குடும்பங்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ஏதும் இதுவரை தரப்படவில்லை. தொழிற்பேட்டையில் உள்ளூர் மக்களுக்கு 25 சதவீதம் வேலைவாய்ப்பு தர வேண்டும். குறிப்பாக ஊசுடு தொகுதி மக்களுக்கும், நிலத்தை கொடுத்தவர்களுக்கும் அரசு வேலை தர வேண்டும். தொழிற்பேட்டையில் எந்த பிரச்னையாக இருந்தாலும் தொகுதி எம்.எல்.ஏ.,வை தான் முதலில் அணுகி கேள்வி கேட்பர். ஆனால் தொழிற்பேட்டை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தொகுதி எம்.எல்.ஏ.,விற்கு எந்த முக்கியத்துவம் கொடுக்காததை ஏற்க முடியாது.கரசூர் தொழிற்பேட்டை தொடர்பாக எந்த ஒப்பந்தம் போட்டாலும், தொகுதி எம்.எல்.ஏ., ஒரு உறுப்பினராக இடம் பெற செய்ய வேண்டும். தொழிற்பேட்டை டெண்டரை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் குளோபல் டெண்டர் விட வேண்டும். ரெஸ்டோ பார்களால் புதுச்சேரி மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ஆனால் எனது தொகுதியில் கல்வி நிறுவனங்களுக்கு எதிரே ரெஸ்டோ பார் வைக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த சமூக சீர்கேட்டிற்கு யார் அனுமதி தந்தது. கல்வி நிறுவனங்களுக்கு எதிரே ரெஸ்டோ பார் வைக்கலாம் என, எந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனது தொகுதி மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் எதிர்ப்பு குரலை வெளிப்படுத்த சட்டசபையில் இன்று 6ம் தேதி காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளேன் என்றார்.

அமைச்சரவையில்

ஏன் இடமில்லை

அமைச்சரவையில் ஆதிதிராவிடர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாது ஏன் என சாய்சரவணன்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'என்னிடமிருந்து திடீரென அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதன் பிறகு ஆதிதிராவிடர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரவில்லை. ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் அமைச்சரவையில் இடம் தரவில்லை. பிரதமர் மோடி தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனைத்து திட்டங்களை உடனடியாக செய்து கொடுக்கிறார். பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவரை நாட்டின் ஜனாதிபதியாக அமர வைத்து அழகு பார்க்கிறார். ஆனால் புதுச்சேரி அமைச்சரவையில் ஆதிதிராவிடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி