உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில் ஐக்கியம்

 புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில் ஐக்கியம்

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இருவர் விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தனர். புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன், காரைக்காலை சேர்ந்த அசனா ஆகியோர் நேற்று, அடையாரில் உள்ள த.வெ.க., தலைவர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து, அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். அவர்களிடம், புதுச்சேரி அரசியல் நிலவரங்களை கேட்டறிந்த விஜய், இருவரிடம் சட்டசபை தேர்தல் தொடர்பாக விவாதித்தார். சந்திப்பின்போது த.வெ.க., பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார். பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் தலைவர் சாமிநாதன், காங்., ஆட்சியில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நியமன எம்.எல்.ஏ., வாக இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காரைக்காலை சேர்ந்த அசனா தே.மு.தி.க.,வில் இருந்து அ.தி.மு.க.,வில் இணைந்து கடந்த 2016-21வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். சில மாதங்களுக்கு முன் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி அமைதி காத்து வந்தது குறிப்பிடத்தக்கது. த.வெ.க., பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர். அவருக்கு புதுச்சேரியில் அரசியல் நிலவரம் அத்துப்படி. எனவே அவர், மூலமாக பிற கட்சிகளில் அதிருப்தியில் உள்ளவர்களை த.வெ.க.,வில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் முக்கிய பிரமுகர்கள் த.வெ.க.,வில் இணைய உள்ளனர். குறிப்பாக சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு முக்கிய பிரமுகர்களை இழுக்க அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதுச்சேரியில் த.வெ.க.,விற்கு தலைமை அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி