அரசு வேலை வாங்கி தருவதாக நண்பரிடம் ரூ.7.5 லட்சம் மோசடி
புதுச்சேரி: அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி நண்பரிடம் ரூ. 7.5 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பழனி,53; காங்., பிரமுகர். இவருக்கு, அரசு மருத்துவமனையில் பல்நோக்கு ஊழியராக பணி புரிந்து வரும் ரெட்டியார்பாளையம், லுாயிஸ் ரெட்டியார் தோட்டத்தை சேர்ந்த, ராஜாகண்ணு மகன் அருள், 43; என்பவர் நண்பரானார். இந்நிலையில் அருள் தனக்கு அரசு துறையில் முக்கிய நபர்களை தெரியும் எனவும், அதனால், சில லட்சம் செலவு செய்தால், அரசு வேலை எளிதாக வாங்கி விடலாம் என்றார். அதனை நம்பிய பழனி, தனது மகனுக்கும் மற்றும் உறவினர் மகனுக்கும் அரசு வேலை வாங்கி தருமாறு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அருளிடம் ரூ.7.5 லட்சம் பணம் கொடுத்தார். ஆனால், அருள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. மேலும், கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் காலம் கடத்தி வந்தார். இதுகுறித்து பழனி அளித்த புகாரின் பேரில் அருள் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.