விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி இரண்டாம் நாளான நேற்று பொதுமக்கள் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைத்தனர். புதுச்சேரியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று முன்தினம் பொது இடங்கள், கோவில்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடந்தது. புதுச்சேரியில் முக்கிய இடங்களில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 5ம் நாளான 31ம் தேதி அன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பழைய துறைமுகம் அருகே கடற்கரையில் கரைக்கப்படும். இதற்கிடையே பொது மக்கள் வீடுகளில் வழிபட்ட சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகளை நேற்று மாலை தலைமை செயலகம் எதிரே உள்ள கடலில் கரைத்தனர்.