அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் அரசு ஆலோசனை; முதல்வர் தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், ஆசிரியர் தின விழா காமராஜர் மணிமண்டபத்தில்நடந்தது. விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, 21 ஆசிரியர்களுக்கு 'மாநில நல்லாசிரியர் விருது' வழங்கினார். தொடர்ந்து,பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 162 ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம்,தலைமைச் செயலர் சரத் சவுக்கான், அரசு செயலர் கிருஷ்ண மோகன் உப்பு, இயக்குநர் அமன் ஷர்மா மற்றும் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நல்லாசிரியர் விருது பெற்ற ராஜதிலகம் ஏற்புரை வழங்கினார். விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசுகையில்,'மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுத்து, அவர்களை சிறந்த பிள்ளையாக நாட்டுக்கு கொடுக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அரசு அடிப்படை கல்வியுடன், தற்போது உயர் கல்வியிலும் கவனம் செலுத்தி வருகிறது. பள்ளி படிப்பை முடித்தவுடன் அனைவருக்கும் கல்லுாரியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து, இதுவரை 72 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அரசு கல்லுாரியில் சேர்ந்து படிப்பவர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை. ஆனால் தனியார் கல்லுாரிகளில் சேர்ந்து படிப்பவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தோடு கூடுதல் கட்டணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை செலுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. அடுத்தாண்டு முதல் அந்த நிலைகூட இல்லாமல் எல்லோரையும் அரசு மருத்துவக் கல்லுாரியிலேயே சேர்க்க முடியுமா என்பதையும் அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்காது. கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. 682ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.இதனால் அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி விகிதம் கிடைக்கிறது. சிறந்த கல்வியை கொடுக்கும் போது அந்த மாநிலம் நல்ல வளர்ச்சியை பெரும். ஆதலால் தான் நம்முடைய புதுச்சேரி மாநிலம் பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது' என்றார்.