அர்ச்சகர்களுக்கு வீடு அரசு கொறடா வலியுறுத்தல்
புதுச்சேரி : சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கையின் போது அரசு கொறடா ஆறுமுகம் பேசியதாவது:தலைமை செயலகத்தில் 3 ஆண்டிற்கு மேல் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பிற அலுவலகங்களுக்கு மாற்ற வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களை பணியிலிருந்து விடுவித்து, இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். காலியாக உள்ள 'சி' மற்றும் 'பி' பிரிவு பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உடனே வேலை வழங்க வேண்டும். இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பல ஆண்டுகளாக அரசு இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். வீடுகள் தோறும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு அந்தந்த கல்வி நிலையங்களிலேயே எல்.எல்.ஆர்., (ஓட்டுநர் பழகுநர்) உரிமத்தை போக்குவரத்து துறை சிறப்பு முகாம் நடத்தி வழங்கிட வேண்டும்.நகரமைப்பு குழும அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு ஒருமுறை தளர்வு வழங்கி அபராதத்துடன் அப்ரூவல் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்வரும் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க வேண்டும். கோவில்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.அரசு சார்பில் மருந்தகங்கள் திறந்து, மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.