ரூ.200 கோடி அளவில் அரசின் உட்கட்டமைப்பு பணிகள் ஸ்தம்பிப்பு
புதுச்சேரி: கட்டுமான பொருட்களின் விலையேற்றதால் அரசு துறைகளில் 200 கோடி அளவிற்கு உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளமுடியாமல் ஸ்தம்பித்துள்ளன.புதுச்சேரியில் கட்டுமான தொழிலில் மூலப்பொருட்களின் விலை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. தற்போது கல்குவாரிகளில் தயாராகும் ஜல்லிக்கற்கள், ஜி.எஸ்.பி. ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட், போன்றவற்றின் விலை திடீரென அதிகரித்து கட்டுமான தொழில் ஆட்டம் கண்டுள்ளது. கட்டுமான பணிக்கு அடிப்படையான சிமென்ட், இரும்பு விலை உச்சமாக உள்ளது. 270 ரூபாய்க்கு விற்ற சிமெண்ட் மூட்டை தற்போது 370 ரூபாய்க்கு விற்கிறது. இதேபோல் இரும்பு கம்பிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 58 ஆயிரத்திற்கு விற்ற சாதாரண நிறுவனங்களின் டி.எம்.டி., ஐ.எஸ்.ஐ., ஒரு டன் கம்பி தற்போது 68 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுவே பிராண்ட் நிறுவனங்களின் ஒரு டன் இரும்பு கம்பி 68 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதேபோல் 6 எம்.எம்., 12 எம்.எம்., 20 எம்.எம்., 40 எம்.எம்., என அனைத்து ஜல்லிகளின் விலையும் வழக்கத்தை விட 1,000 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் புதுச்சேரியில் அரசு கட்டுமான பணிகள் அனைத்து இடங்களிலும் ஸ்தம்பித்துள்ளன. பொதுப்பணித் துறையில் தற்போது 100 கோடி அளவிற்கு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், டெண்டர் விட்டு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணிகள் துவங்கப்பட இருக்கின்றன. கட்டுமான பொருட்களில் விலையேற்றதால் இந்த 200 கோடி பணிகளும் துவங்க முடியாமல் ஒப்பந்ததாரர்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். ரேட் கட்டுபடியாகவில்லை. அரசு நிர்ணயித்துள்ள பி.எஸ்.ஆர்., ரேட் சந்தை நிலவரத்திற்கு இல்லை என, பணிகளை துவங்காமல் கையை பிசைந்து வருகின்றனர்.பி.எஸ்.ஆர்., ரேட்டை மாற்ற வேண்டும் என, போர்கொடி உயர்த்தியுள்ள பொதுப்பணித் துறையின் ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:கடந்த பிப்ரவரி மாதம் ஒரு யூனிட் எம்.சாண்ட் மணல் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. திடீரென தமிழகம், புதுச்சேரியில் உள்ள கல்குவாரிகளில் கடந்த மார்ச் மாதம் 1,000 ரூபாய் உயர்த்தி 4 ஆயிரம் ரூபாய்க்கு எம்.சாண்ட் விற்கப்பட்டது. தற்போது ஒரு டன் எம்.சாண்ட் 6 ஆயிரமாகவும், பி.சாண்ட் 7 ஆயிரமாகவும் உயர்த்தி விற்கப்படுகிறது. ஆனால், புதுச்சேரி அரசு பி.எஸ்.ஆர்., ரேட் ஒரு டன்னுக்கு 4,200 ரூபாய் மட்டுமே எம்.சாண்ட்டிற்கும், பி.சாண்ட்டிற்கும் நிர்ணயித்துள்ளது. இதனால் ஒரு டன் எம்.சாண்ட், பி.சாண்ட் வாங்கி அரசு கட்டுமான பணி செய்யும்போது 1,800 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.இப்போது கட்டுமான பணிகளை ஆரம்பித்தால் 1 கோடி ரூபாய் செலவில் முடிக்க வேண்டிய பணிகளை 3 கோடியில் முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கூடுதலாக சொந்த பணத்தை போட்டு நஷ்டத்தில் எந்த பணியையும் அரசுக்கு செய்ய முடியாது. இதன் காரணமாகவே எந்த பணியும் துவங்காமல் அரசின் முடிவிற்காக அமைதி காத்து வருகிறோம். ஒன்று அரசு பி.எஸ்.ஆர்., ரேட்டினை அனைத்து கட்டுமான பொருட்களுக்கும் சந்தையின் விலைக்குகேற்ப அதிகரித்து கொடுக்க வேண்டும்.இல்லையெனில் சந்தை மதிப்பிற்கும் பி.எஸ்.ஆர்., ரேட் இடைவெளி தொகை தர உறுதியளிக்க வேண்டும். இது மட்டுமே தீர்வாக இருக்கும். இது தொடர்பாக கவர்னர், முதல்வர், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விலையேற்றம் காரணமாக பல கோடி புழக்கம் உள்ள அரசின் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இந்த விஷயத்தில் அரசு காலம் தாழ்த்தாமல் விரைவாக முடிவெடுக்க வேண்டும்' என்றனர்.என்.ஆர்.காங்.,-பா.ஜ., ஆட்சி முடிய ஓராண்டு மட்டுமே உள்ளது. அதற்குள் சாலை, வாய்க்கால், குடிநீர் நீர்த் தேக்க தொட்டி என அனைத்து கட்டுமான பணிகளையும் முடித்து திறப்பு விழா நடத்தி, அந்தந்த பகுதி மக்களின் ஓட்டுகளை அள்ள திட்டமிட்டுள்ளது. ஆனால், கட்டுமான பொருட்களில் விலையேற்றத்தால் திட்டமிட்டப்படி பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
12ம் தேதி ஆர்ப்பாட்டம்
பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், 'கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால் புதுச்சேரி அரசின் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி தனியார் ஒப்பந்ததாரர்களும் நிலை குலைந்துள்ளனர். தற்போதுள்ள பி.எஸ்.ஆர்., ரேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரேட்டில் பணி செய்வதால் நஷ்டம் ஏற்படுகிறது. பொதுப்பணித் துறை ஒப்பந்தாரர்களின் இடர்பாடுகளை களை கோரி, வரும் 12ம் தேதி பொதுப்பணித் துறை தலைமை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றனர்.