தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் சறுக்கல் ...: மருத்துவ படிப்பிற்கு 29 பேர் மட்டுமே தகுதி
புதுச்சேரி, ஜூலை 28- எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் சறுக்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாகவே 29 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளதால் மருத்துவ இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர்வேதம்) உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 8558 பேர் இ-மெயில் கொடுத்து பதிவு செய்திருந்த சூழ்நிலையில், அவர்களில், 6,678 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1437 பேர், விண்ணப்பித்துள்ள நிலையில், இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் தரவரிசை பட்டியலில் கடுமையாக சறுக்கியுள்ளனர். மொத்தமே 29 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் மதிப்பெண்ணும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நீட் மதிப்பெண்-300க்கு மேல் இந்தாண்டு 870 பேர் எடுத்திருக்க வெறும் இரண்டு அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மீதி அனைவருமே தனியார் பள்ளி மாணவர்கள். மருத்துவ படிப்பிற்கு தகுதி பெற்றுள்ள 29 அரசு பள்ளி மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண் 380; குறைந்தபட்ச மதிப்பெண்-114. அதேவேளையில் தனியார் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் மதிப்பெண்களை அள்ளி மலைக்க வைத்துள்ளனர். நீட் மதிப்பெண் 600க்கு மேல் 4 மாணவர்கள், 500க்கு மேல் 56 பேர், 400க்கு மேல் 317 பேர் டாப்பில் டாக்டர் க னவில் காத்திருக்கின்றனர். தனியார் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ள நீட் மதிப்பெண்ணை ஒப்பிடும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு எடுத்த மதிப்பெண் ஒன்றுமே இல்லை. 10 சதவீத இட ஒதுக்கீடு இல்லையெனில் இந்தாண்டு ஒருவருக்கு கூட மருத்துவ சீட் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படியும் காலி தான்... இதேபோல் மருத்துவ படிப்புகளுக்கு மொத்தமே 29 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளதால், அந்த இடங்களை நிரப்புவதிலும் இந்தாண்டு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லுாரியில் புதுச்சேரி-9, காரைக்கால்-2, ஏனாம்-1, மாகி-1 என 13 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. தனியார் கல்லுாரிகளிலும் பிம்ஸ்-6, மணக்குள விநாயகர்-9, வெங்கடேஸ்வரா -9 என கடந்தாண்டு 24 சீட்டுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் கூட மொத்தமுள்ள 37 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் 29 இடங்கள் அரசு மாணவர்களுக்கு நிரப்பியது போக 8 சீட்டுகள் காலியாக இருக்கும். இதேபோல் பல் மருத்துவம் படிப்பில்-11, ஆயுர்வேத படிப்பில் 4 என 15 சீட்டுகளும் நிரம்பாமலேயே இந்தாண்டு காலியாகவே இருக்கும். எப்படி பார்த்தாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தமுள்ள 52 மருத்துவ சீட்டுகளில் 29 நிரப்பியது போக, 23 சீட்டுகள் கடைசி வரை காலி யாகவே இருக்கும். பல கட்ட கவுன்சிலிங்கிற்கு பிறகு இந்த இடங்கள் வேறு பிரிவிற்கு மாற்றப்பட உள்ளது. தனி செயல் திட்டம் மருத்துவ படிப்பிற்கான சென்டாக் தரவரிசை பட்டியல் அரசு பள்ளி மாணவர்களின் நிலையை புட்டு புட்டு வைத்துள்ளது. நீட் நுழைவு தேர்வில் அரசு பள்ளி பின் தங்கியுள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மருத்துவம் பயிலுவதற்காக பொன்னான வாய்ப்பினை புதுச்சேரி அரசு பிரகாசப்படுத்தியுள்ளது. ஆனால் போதிய நீட் நுழைவு தேர்விற்கான பயிற்சி இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் சறுக்கியுள்ளனர். மருத்துவம் பயில கிடைத்த வாய்ப்பினையும் பறிகொடுத்துள்ளனர். நீட் நுழைவு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதிப்பதற்கான தனி செயல் திட்டத்தை பள்ளி கல்வி துறை தீட்டி செயல்படுத்த வேண்டும்.