சிறப்பு கூறு நிதியை 100 சதவீதம் செலவிட வேண்டும் அதிகாரிகளுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம், ராஜ்நிவாசில் நடந்தது.கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார்.ஆய்வுக் கூட்டத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய செயலர் குடே சீனிவாஸ் கலந்து கொண்டு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.துறைச் செயலர் முத்தம்மா பேசுகையில், 'புதுச்சேரி மாநிலத்தில் - 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகையில் 15.7 சதவீதம் அட்டவணை இனத்தவர். அரசு பட்ஜெட்டில், திட்டசெலவின ஒதுக்கீடு ரூ. 2,176 கோடியில் ரூ. 525 கோடி சிறப்பு கூறு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது திட்ட செலவில் 24 சதவீதமாகும். இது நிதி ஆயோக் வழிகாட்டுதலின்படி உள்ள 16 சதவீதம் காட்டிலும் கூடுதல் நிதியாகும்.கடந்த நிதி ஆண்டுகளில் சிறப்பு கூறு நிதி 91 சதவீதம் செலவு செய்யப்பட்டதும், இந்த ஆண்டு அதை 100 சதவீமாக எட்டும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றோம்' என்றார்.கூட்டத்தில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், 'இந்த ஆண்டு சிறப்புக்கூறு நிதியை 100 சதவீதம் செலவு செய்வதுடன் அதனை விரைவு படுத்த வேண்டும்.துறையின் மூலமாக கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்களை, விரைவில் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணப்பட்டு மற்றும் திம்ம நாயக்கன் பாளையத்தில் இலவச மனைப்பட்டாக்களை இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு புதுச்சேரி நகரப் பகுதியில் கூடுதலாக தங்கும் விடுதிகள் கட்ட நடவடிக்கை எடுத்க வேண்டும்.புதுச்சேரியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டு உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்றார்.கூட்டத்தில், தலைமைச் செயலர் சரத் சவுகான், கவர்னரின் செயலர் மணிகண்டன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழகம், கேரளா, புதுச்சேரி மண்டல இயக்குநர் ரவிவர்மன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.