போலீஸ் துறை மீது தான் மக்களுக்கு அதிக நம்பிக்கை கவர்னர் கைலாஷ்நாதன் புகழாரம்
புதுச்சேரி: பொதுமக்கள் மற்ற துறைகளை விட, போலீஸ் துறையை சேர்ந்தவர்களிடம் தான், அதிக நம்பிக்கையை வைத்திருக்கின்றனர் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.புதுச்சேரியில் நடந்த காக்கி உடை வீரர்கள் விழாவில் அவர் பேசியதாவது:ஒரு நாட்டுக்கு ராணுவம் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு போலீசாருக்கும் முக்கிய பங்கு உண்டு. அதாவது உள்நாட்டின் பாதுகாப்பு, உங்கள் கையில் தான் இருக்கிறது. பல நேரங்களில் கடைநிலையில் பணியாற்றும் போலீசார் தரும் தகவல் தான் சரியான முடிவுகளை எடுப்பதற்கு அடிப்படையாக அமைகிறது.மக்கள் வேறு எந்த துறையை சேர்ந்தவர்களிடம், நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் வைப்பதை விட, உங்கள் மீது தான், அதிகம் வைத்திருக்கின்றனர். புதுச்சேரி போலீசார் அணியும் சிவப்பு நிற தொப்பி, உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இது, புதுச்சேரி போலீசாரின் தனித்த அடையாளமாக பார்க்கப்படுகிறது.பிரதமர் மோடி ஒரு முறை, 'எதாவது ஒரு நிகழ்வு அல்லது பாதிப்பு ஏற்படும் போது, அந்த இடத்தில் எத்தனை துறை அதிகாரிகள் வந்திருந்தாலும், ஒரு போலீஸ் வந்தவுடன் தான் மக்கள் அரசாங்கம் வந்ததாக நினைக்கின்றனர்' என கூறினார்.போலீசார் கடமை தவறாமல் தவறு செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தருவதில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.