கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் வழங்கவில்லை
புதுச்சேரி: 108 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டிய 29 அதிகாரங்களை அரசு வழங்கவில்லை என, மக்கள் முன்னேற்ற கழகம் குற்றச்சாட்டியுள்ளது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி., அறிக்கையில், 74-வது சட்டத் திருத்தத்தின்படி நகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய 18 அதிகாரங்களில், வெறும் 4 மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. 200௬-க்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது மிகப்பெரிய அரசியலமைப்பு மீறல் என, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '14 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளை முடக்கி வைத்திருக்கும் இந்த அரசு பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. 73வது சட்டத் திருத்தத்தின்படி, 108 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டிய 29 அதிகாரங்களையும் அரசு வழங்கவில்லை. இதுகுறித்து பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.