தேசிய அளவில் குழு நடனம்; புதுச்சேரி அணி முதலிடம்
புதுச்சேரி; தேசிய அளவில், கலாசார குழு நடன போட்டியில், வெற்றி பெற்ற புதுச்சேரி அணியை மேள, தாளத்துடன் வரவேற்றனர்.மத்தியபிரதேசம் மாநில, தலைநகர் போபாலில் பள்ளிகளுக்கு இடையிலான, தேசிய அளவில், கலாசார குழு நடனம் போட்டி நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரி மாநில சார்பில், முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 10 மாணவிகள், கதிர்காமம் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர், தனியார் பள்ளியில் இருந்து இரண்டு மாணவர்கள் என, மொத்தம் 15 பேர் அடங்கிய குழு, ஆசிரியர் பாபு தலைமையில் சென்றனர்.அங்கு நடந்த போட்டியில், 22 மாநிலங்களை சேர்ந்த, 450 மாணவர்களுக்கு இடையே நடந்த போட்டியில், புதுச்சேரி அணி முதலிடத்தை பெற்றது. சாம்பியன் கோப்பையுடன், 1.15 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.தென்னிந்தியாவில் முதல் முறையாக புதுச்சேரி அணி வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரிக்கு நேற்று வந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மேள தாளத்துடன் வரவேற்பு அளித்தனர். முதலியார்பேட்டை ரோடியர் மில் பகுதியில் இருந்து 1 கி.மீ., வரை மாணவர்கள் மகிழ்ச்சியில், ஆடி, பாடி கோப்டையுடன் சென்றனர்.