சுகாதார இயக்க அலுவலக ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரி: தேசிய சுகாதார இயக்ககத்தின் அலுவலக ஊழியர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி நேற்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையின் கீழ் தேசிய சுகாதார இயக்கக (என்.எச்.எம்) அலுவலகத்தில் 90க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு முதல் என்.எச்.எம். தொழில் நுட்ப ஊழியர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு தொடர்ந்து ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட அலுவலக ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி நேற்று பணிகளை புறக்கணித்து சுகாதாரத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாக தலைமை செயலகம் சென்று, சுகாதாரத்துறை செயலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.