உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கரப் டைபஸ் நோய் குறித்து சுகாதார துறை எச்சரிக்கை அறிகுறி தென்பட்டால் உடனே சிகிச்சை பெற அறிவுறுத்தல்

ஸ்கரப் டைபஸ் நோய் குறித்து சுகாதார துறை எச்சரிக்கை அறிகுறி தென்பட்டால் உடனே சிகிச்சை பெற அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்கரப் டைபஸ் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் 'ஸ்கரப் டைபஸ்' நோய் பரவி வருகிறது. இந்நோய், புதுச்சேரி மாநிலத்தில் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், சுகாதாரத்துறை போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தற்போது குளிர்காலம் என்பதால், இந்த நோய் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. 'ஸ்கரப் டைபஸ்' என்பது ஒரு வகை ஒட்டுண்ணி கடியால் ஏற்படுகின்ற காய்ச்சல். இது, 'ஓரியன்ஷியா சுட்சுகமுசி' எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய், தொற்றுக்குள்ளான உண்ணிகள் மனிதர்களை கடிக்கும் போது பரவுகிறது. ஒருவரோடு உரையாடுதல், கட்டி அணைத்தல், தொடுதல், இருமல், தும்மல் போன்றவற்றால் பரவுவதில்லை.இந்த நோய் தொற்று பூனை, நாய், எலி போன்ற மனிதர்களிடம் நெருங்கி வாழும், உயிரினங்களுக்கு பரவும். செல்லப்பிராணிகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டாலும் கூட, மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்

இந்த உண்ணிகள் கடித்த, 14 நாட்களில் காய்ச்சல், குளிர் நடுக்கம், சோர்வு, உடல் வலி, இருமல், உடல் முழுவதும் நெறி கட்டிக்கொள்ளுதல் போன்றவை ஏற்படும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால், இரண்டாவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா, கோமா, பதற்றநிலை, திடீர் சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் ஏற்படும். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் செயலிழந்து, மரணம் அடையும் வாய்ப்பு, 30 சதவீதம் வரை உள்ளது.இந்த நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு உண்ணி கடித்த இடத்தில், நெருப்பால் சுட்டது போல, கருப்பு நிறத்தில் உலர்ந்து போன நீள்வட்ட புண் உண்டாகும். இதற்கு 'எஸ்கர்' என்று பெயர்.

சிகிச்சை முறை

காய்ச்சலோடு சேர்த்து உண்ணி கடித்ததற்கான புண் இருந்தால் உடனடியாக, டாக்டரை அணுக வேண்டும். இது பாக்டீரியா தொற்று என்பதால் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மாத்திரைகள் மூலமாகவே முழுமையாக குணப்படுத்த முடியும். வீட்டிலேயே கால தாமதம் செய்யாமல், விரைவாக சென்று கிசிச்சை பெற வேண்டும்.முதியவர்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் இருப்பவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் போன்ற இணை நோய் இருப்பவர்களுக்கு இந்த நோய் பாதித்தால், கடும் விளைவுகளை ஏற்படுத்தும். உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ