கிருமாம்பாக்கத்தில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு
பாகூர்: கிருமாம்பாக்கம் பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.பாகூர் கொம்யூனுக்குட்பட்ட கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், காட்டுக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகள், சாலையோரங்களில் கொட்டிக் கிடக்கும் கழிவுகளை தின்று ஊர் முழுதும் உலா வருகின்றன. சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் பன்றிகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். பன்றிகளின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது, அவ்வப்போது மழையும் பெய்து வருவதால், குடியிருப்பு பகுதியையொட்டி, ஆகாங்கே மழை நீர் தேங்கி உருவாகும் குட்டைகளும், புதர்களும் பன்றிகளின் வாழ்விடமாக மாறியதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கிருமாம்பாக்கம் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.