புதுச்சேரியில் இடியுடன் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று பெய்த கனமழை காரண மாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் கோடை காலத்திற்கு பின்னும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 10 நாட்களுக்கு மேல் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் மிகுந்த அவதிகுள்ளாகி வந்தனர். இந்நிலையில் மேற்கு திசை காற்றின் காரணமாக புதுச்சேரியில் வரும் 7-ந் தேதி வரை மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி புதுச்சேரியில் நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் கனமழை பெய்யத் தொடங்கியது. இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் நெட்டப்பாக்கம், திருக்கனுார், பாகூர், வில்லியனுார் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட டிராபிக் ஜாமால் இந்திராகாந்தி சிக்னல் சந்திப்பின் நான்கு பகுதியிலும் 300 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை வாகனங்கள் வரிசையாக நின்றன.