கால்நடைகள் சாலையில் திரிந்தால் உரிமையாளர்கள் மீது வழக்கு
டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உத்தரவுகால்நடைகளை சாலையில் திரிய விட்டால், உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய டி.ஐ.ஜி., சந்தியசுந்தரம் உத்தரவிட்டார்.புதுச்சேரியில் போக்குவரத்து பிரச்னை பெரும் தலைவலியாக மாறி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே சாலைகள் தான் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. மக்கள் தொகை, வாகன பெருக்கத்திற்கு ஏற்ப புதிய சாலைகள், மேம்பாலங்கள் உருவாக்கப்படவில்லை.தரமற்ற சாலை பணியால், ஆங்காங்கே பள்ளம் உருவாகி பல்லாங்குழி சாலையாக மாறிவிட்டது. தரமற்ற சாலை, தாறுமாறாக செல்லும் வாகனங்கள் மத்தியில் மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு சாலைகளில் பயணித்து வருகின்றனர். இதுதவிர சாலையில் திரியும் கால்நடைகளால் மேலும் ஆபத்து அதிகரித்து விடுகிறது.கால்நடைகள் மீது வாகனம் மோதி பலர் உயிரிழக்கின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தால், கால்நடை பிடிப்பது எங்கள் வேலை கிடையாது; நகராட்சியில் கூறுமாறு சொல்கின்றனர்.நகராட்சியினர் கால்நடையை பிடிக்க வந்தால் ரவுடிகள் மிரட்டுவதாக நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரத்திடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சாலையில் கால்நடைகள் திரிய விட்டால் போலீசார் நகராட்சி மூலம் பிடித்து கோ சாலையில் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.கால்நடையை மீட்க யாரேனும் வந்தால், அவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, போலீசாருக்கு உத்தரவிட்டார்.